Saturday, April 19, 2014

அஜ்னபி கவிதைகள் 4

ம்.. 

விடைபெற்றுப் பிரியும்
இறுக்கமான தருணங்களில்
பிரயாசையுடன் நேர்ப்பார்வை தவிர்த்தாலும்
தழுதழுக்கும் குரலில் தொக்கி நிற்கிறது
சொல்ல நினைத்த ஏதோ ஒன்று
தெருக்குழாய்த் தாழின்
வலஞ்சுழித் திருகல் மீறி
தயங்கியொழுகும் ஒற்றைத்துளியென..

*




காத்திருப்பு 

அலுவலக மென்பொருளில்
அவசரப்பணி நிகழ்த்துகையில்
குறுக்குவழித் தொடுப்பு ஒற்ற
மணற்கடிகை காட்டி வெறுப்பேற்றும்
கணித்திரையின் எந்திர தயக்கத்தை
அலுத்துக்கொள்ளும் தருணங்களில்
என்றேனும் நினைத்துப்பார்த்ததுண்டா
வகுப்பில் தான் பெற்ற
நட்சத்திரக்குறியை காண்பிக்க
இரவு வரை காத்திருந்து
துயிலிடை விசித்தழும்
ஈன்ற பொழுதின்
பெரிதுவக்க மறந்த மகவை?

*



இரவு 

சாலையோர செம்புலத்தில்
பெய்யெனப் பெய்து தேங்கிய
நேற்றைய மழையின் சகதியில்
கலங்கலாய் மிதக்கும் நிலவை
வேகமாய் அரைத்துச் சென்று
கிறீச்சிட்டு நிறுத்தப்படும் ஊர்தியிலிருந்து
யுகங்களின் களைப்புடன்
மிகை ஒப்பனையிட்ட பேரிளம்பெண்கள்
உதிர்க்கப் படுகிற
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
இரவின் அழுக்குத்துணி முனையில்
முடிந்துவைக்கப் படுகின்றன
உறங்காப் பெருநகரின்
கறைபடிந்த சில்லறைக்காசுகள்..

*


கோடை! 

இரண்டாம் யாமத்தில்
இயற்கை அழைப்பு உந்த
விழித்தெழுந்த பொழுதில்
சாம்பல்நிற இருளில்
மின்விசிறியின் சுழற்சியினூடே
விட்டுவிட்டுத் தெரிந்த
பிறைநிலா பற்றி
நான் எழுதிக்கொண்டிருக்கும்
இக்கவிதையை
தேய்வழக்கு* எனச்
சொல்லப்போகும் அன்பர்களே,
தயவு செய்து அதனை
அந்த இரவிடம்
போய்ச் சொல்லுங்கள்..

*Cliché

*



இரை 

அடுக்குமாடி சீமாட்டி வீசியெறிந்த
நெகிழிக் குப்பையில்
இரைக்கான நிகழ்தகவை கண்ணுற்ற
உற்சாக தருணத்தில்
இறுகப்பற்றுகிறது கொடிக்கயிற்றை
இன்னுமொரு வசந்தத்தையும்
பெரு நகரில் கழிக்கச்
சபிக்கப்பட்ட காகம்..

*


முதுமை 

உதிரியாய் வீழ்கிற
கனவுகளைப் பொருட்படுத்தாது
எதிர்பார்ப்பின் நாரில் தொடுத்த
இழப்பதற்கு எதுவுமற்ற
முதுமை வாழ்வை
முழங்களில் அளக்கிறாள்
பேரங்களில் படியாது
விலகிச் செல்லும் விதியை
மவுனமாய்ச் சபித்தபடி..

*



பூ

பூத்திருந்த தடயத்தை
சிறுகச்சிறுக இழந்திடும்
நேற்றைய பூவின்
சுருளும் இதழ்கள்
கொடுங்கனவுகளில் உழலும் முதிர்கன்னியின்
கண் கீழ்க் கருவளையமென..

*


இலை

வசந்தத்தின் துவக்கத்தில்
நிறையுடலியாய் உருமாறி
அயல்செடிகளில் மகரந்தம் ஆய்கிற
ஒளிர்வர்ண பட்டாம்பூச்சிகளை
மயிர்க்கொட்டி பருவத்திலேயே
அறிந்திருக்கக் கூடும்
பச்சையத்தில் உயிர்த்திருக்கும்
பாதி இலைகள்..

*

.
வளையோசை ஒததிசைவை
சமீபததில தொலைதத
நகபபூசசு உதிரநத விரலகள
விசையொறறி தடடெழுதிய
கவிதையில காணவிலலை
ஒறறெழுததுகளை

Friday, February 14, 2014

كن فيكون

ஆகுக என்றனன்*
நானாய் நீயாய்
நாம் எனப் பொதுவாய்
ஆணாய் பெண்ணாய்
அவர்-அ்வை-அதுவாய்

தனியாய் குழுவாய்
தழைத்திடும் செறிவாய்
முடிவிலி எழுவாய்
முன்கதை அறிவாய்
*
இருந்தது இருளாய்
இல்லாப் பொருளாய்

நிகழ்ந்தது விதியாய்
நிச்சயம் புதிதாய்

வெடித்தது பெரிதாய்
விரிந்தது வெளியாய்
*
பொறியாய் எரியாய்
ஒளியாய் வளியாய்

துளியாய் துணுக்காய்
வலுவாய் துகளாய்

கருவாய் அணுவாய்
உருவாய் பொருளாய்


சிறிதாய் பெரிதாய்
சிலவாய் பலவாய்

கல்லாய் மண்ணாய்
புல்லாய் பூண்டாய்

எலும்பாய் சதையாய்
எல்லாம் ஜதையாய்
*
விண்ணகம் முதலாய்
விரல் நுனி வரையாய்

இறையவன் முறையாய்
இழைத்தனன் சுளுவாய்
*
தோற்றுவாய் அறிவாய்;
போற்றுவாய் தொழுவாய்!

(*كن فيكون )

சார்பு

சார்பு

வாழ்வெனும் நெடுவழித்தடத்தில்
தற்செயலாய் சந்திக்க நேர்ந்த
ஸ்நேகம் மிகு சகபயணிக்கு
இவ்வழிப்போக்கன் வரையும்
தன்னிலை விளக்கமிது..

உம்மீது சாந்தி நிலவுக;
இறையருளும் பொலிவும் நிறைக!
உமதன்புக்கும் பரிவுக்கும்
மிக்க நன்றி..
மேலும்,
திகட்டத் திகட்டப் பொழிகிற
உயர்வுநவிற்சி மிகுந்த புகழுரைகட்கும்
உத்தியோகப் பற்றற்ற
உடல்மொழிச் செய்திகட்கும்
இன்னும்,
சொல்லி முடித்த
சொல்ல நினைத்த
சகலவித வார்த்தைகட்கும்
எனது உளங்கனிந்த நன்றியறிதல்கள்..

நிற்க;
இத்தருணத்தில் நானுமக்கு
உணர்த்த விழையும்
யதார்த்தமொன்றுளது:

நீங்களனைவரும் விதந்துரைத்து
இல்லாத கிரீடத்துக்கு
இறகு செருக முனைந்தாலும்
அடியேன் இதற்கெல்லாம்
அருகதையற்றவன்
அன்றியும்
நானொன்றும் பிறவி மேதையோ
நடமாடும் கலைக்களஞ்சியமோ
அல்லன்..

கொஞ்சம் ரசனை
கொஞ்சம் திமிர்
கொஞ்சம் வெட்கம்
கொஞ்சம் கோபம்
மிதமாய் மென்சோகம்
சராசரிக்கும்
சற்று அதிகமாகவே
அலட்சியம் என
கலவையாய்த் திரிபவன்
சாமான்யன்..

எனது நட்பு வட்டத்திலேயே
இந்த ரகத்தில்
மூவர் தேறுவர்:
ஒருவன் பட்டறை கரும்புகையிலும்
மற்றவன் பாலை தேசத்து மணற்புழுதியிலும்
பொருளியல் பரிபாஷையின் படி
'கீழுழைப்பில்' உழல
தற்செயலாய் ஒளிவட்டத்துள் நுழைந்த இன்னொருவனான எனை மாத்திரம்
வியத்தலும் நயத்தலும் என்ன ந்யாயம்?

என் தொழின்முறை முகமூடியா?
குமிழ்பசையாய் மென்றுமிழும் ஆங்கிலமா?
(அல்லது,
சமகாலப் பிரச்னைகளனைத்தினதும்
பின்னணியாய்ச் சாடப்படுகிற
உலகப் பொருளாதாரச் சரிவா?)

உமது அளவீடுகளின் சுட்டெண்
எதனைச் சார்ந்தது?

யதார்த்தபூர்வமாகச் சிந்திக்கையில்
ஒன்று மட்டும் புலனாகிறது
சர்வநிச்சயமாய்..
என் மீதான ஈர்ப்பு உட்பட
அனைத்து கருதுகோள்களுக்குப் பின்னாலும்
எளிய தத்துவமொன்றுளது:

காலம் வெளி
சூழ்நிலை பொருண்மை
ஆழம் அகலம்
நிறை எண் திசை
அறிவு திறன்
அருமை தெரிவு
லாபம் நஷ்டம்
நான் நீ
―சகலமும் சார்புக்குட்பட்டதே!

அஜ்னபி கவிதைகள் 3

மழலை

ஒவ்வோர் இரவிலும்
ஒற்றை ஒற்றலில் விளக்கணைத்து
இடையூறு இல்லா இருளில்
உறங்கிப் பழகிய குழந்தை
தடுப்பூசி ஏற்றிய நாளின்
ஜுரம் கண்ட பகலில்
படுக்கைக்கு எட்டாத
ஒளி ஆளி நோக்கி
பிஞ்சுவிரல் நீட்டி
'இருட்டை போடு'
எனச் சிணுங்குகிறாள்
கண்களை உருட்டும் கரடிபொம்மையை
கட்டியணைத்தபடி..

*



பிரியம்

பிரியமானவர்களால்
விதந்துரைக்கப்படுகிற
பரிச்சயமில்லா அந்நியர் மீது
பறவையாய் மாறி
எச்சமிடத் தோன்றும்
இனந்தெரியாத வன்மம்
அம்மா தூக்கிக் கொஞ்சிய
அயலார் குழந்தைகளின்
மிருதுவான பாதங்களை
கமுக்கமாய்க் கிள்ளிவைத்த
பால்யத்தை நினைவூட்டுகிறது.

*



சுயம்

ஆரம்பப் பள்ளி மாணவனது
அளந்து எழுதுகிற வலது கை
எழுதி எழுதி மேற் செல்ல
அனிச்சை செயலாய் இடது கை
அட்டை கொண்டு மறைப்பதாய்
சுயநலச் சிறையின்
திரையிட்ட வாழ்வினூடே
போட்டிப் பரீட்சையென
சுமையாகிப் போயின
சுற்றமும் சூழலும்..

*

ஓரிரு வரிகளெழுதி
கைவிடப்பட்ட விடைகள்..

எட்டிப் பார்த்தெழுதிய
இரவல் கணக்குகள்..

இவை தவிர
ஊன்றியெழுதி
கிழிபட்ட தாள்களாய்
நட்பும் உறவும்..

*

எழுதிய கட்டுரையை
எழுத்தெண்ணி மீளாய்தல் போல்
பழம் நினைவுகளை மீட்டுவதில்
விரயமாகும் சில பொழுதுகள்..

*

தேர்வு நேரம் முடிந்து
தாள்கள் பறிக்கப்பட்ட பிறகான
அமர்முடுகல் தருணத்தில்தான்
உறைக்கிறது
சுட்டெண் எழுத மறந்தது...
சுயம் அங்கு தொலைந்தது...

*


தரு

பிற்பகலின் இளவெயில் மீது
பன்னீர் தெளித்துக்கொண்டிருந்தது
அந்தி மழை..

அருகாமை கட்டடத்தில் ஒதுங்கி
மற்றொரு தடவையும்
கொணர மறந்த குடையை
மானசீகமாய்க் கடிந்துகொண்டபோது
எதிர்ப்புறமாய் கேட்ட
எந்திர உறுமலை
வினாக்குறி தொக்க
விழி தொடரலானேன்..

ஊராட்சி பூங்காவில்
நெடுஞ்சாலைக்கு மிகச்சமீபமாய்
கிளைபரப்பி நின்ற,
யதேச்சையாகக்கூட அதுவரை
அவதானித்திராத,
அம் மாவைராட்சத எந்திரத்தின் தும்பிக்கை
வேரோடு பெயர்ப்பதை
ஜனத்திரள் ஊடே
வேடிக்கை பார்க்க நேர்ந்த
அக்கணத்தில் தான்
முதன்முதலாக―
மிகச்சரியாய் சொல்வதெனில்,
முதலும் கடைசியுமாக ―கண்டேன்..

நெஞ்சில் வடு தாங்கி
நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்த
விருட்சத்திலிருந்து
உதிர்ந்த காய்களைப்
பொறுக்கிக் கொண்டிருந்தான் ஒருவன்..

சற்றே தள்ளி
பூங்கா முன்றலில்
நிறுவப்பட்டிருந்த
நகரபிதாவின் சிலையின் மீது
எச்சமிட்டுப் பறந்தது
அவசரப்பட்சியொன்று..

*



யட்சி

அகால யாமத்தில்
என் அலைபேசியை
ஆட்கொள்ளும் யட்சி நீ..

நடுநிசியில்தான்
நம் நகர்வலம்..
இல்லையில்லை,
சர்வலோக சஞ்சாரம்..

குறுந்தகவுகளில் அனுப்புகிற
முறுவல் குறிகளுக்கு
தெரிந்து கொண்டே
விளக்கம் கேட்கிறாய்..

சமயோசித பதில்கள் ஒற்ற
தாமதமாகிற நொடிகளில்
உன் 'தவறிய அழைப்புக்களில்'
திக்குமுக்காடித் திணறுகிறது
என் அலைபேசி..

இப்போதெல்லாம்
நாம் பேசித்தீர்த்த
வார்த்தைகளை விட
பேச நினைத்தவைதான்
நன்கு புரிகின்றன..

Thursday, January 9, 2014

எந்திரன் 2014

எந்திரன் 2014


மா நகரப் பெருவெளி

மய்யமான கட்டடம்

ஆறாவது மாடி

அயல் நாட்டு நிறுவனம்

ஐ.டி துறை வேலை

ஐந்திலக்க சம்பளம்


செவி கவ்வும் ஹெட் ஃபோன்

நுனி நாவில் ஆங்கிலம்

விரல் ஒற்றும் விசைப் பலகை

விழி மேயும் கணித்திரை

பின்னிரவின் மணித்துளிகள்

டிஜிட்டலில் கரைய

ஸைபர் வெளி வழியே

தொடரும் எந்திர தவம்


இடைக்கிடை தெம்பேற்ற

நுரை பொங்கும் நெஸ்கஃபே

சமயங்களில்

அகால வேளை குறும் பசிக்கு

ஒற்றை அழைப்பில் கதவு தட்டும்

பீட்ஸா

(இருவருக்கானது;

இலவசம்: ஒரு கோக்!)


இரவுப் பணி முடிந்து

இருப்பிடம் விரைகிற

நிகழ்வுத் தொடர்கள்

கனவு நனவாய்

நழுவியொழுகும்

'தே ஜா வூ’ தருணங்கள்


இலக்கின்றி வெறிக்கும்

உலர்ந்த பார்வைகள்...

நிக்கொட்டின் கசிகிற

நீண்ட பெருமூச்சுகள்...

விளக்கு முட்டும் விட்டிலினது

சிறகசைப்பின் கணப்பொழுதினுள்

தோன்றி மறைந்து இறுகும்

ஸின்த்தட்டிக் புன்னகைகள்...

அறியா முகங்கள்...

பரிச்சயமான முதுகுகள்...

லிஃப்ட்டைப் பகிரும்

சக பயணிகள்!


மதியம் வரை நீடிக்கும்

ஆழ் துயில் அலைவரிசையின்

உதிரிக்கனவுகளுக்கிடையே

அடிக்கடி வந்து போகிறது

கடவுச் சொல் மறந்து

கைசேதப்படுகிறதான

துர்சொப்பனமொன்று...



அஜ்னபி கவிதைகள் 2

கவிமூலம்

ஆதி இரவில்
இருள் பூசிக்கொண்ட
அடர்வனத்துள்
நுழையும் சிற்றோடை
அவிழும் பூக்களின்
மகரந்தத்துணுக்குகளை
காவிச்சென்றதில்
தாழ்நிலத்தில் உருவாகிற
நந்தவனம் போன்று
மிகவும் தற்செயலானது
கவிதை..

*




மழை 


ஏக காலத்தில்
உள்ளும் புறமும்
நனைத்துவிடுகிறது
ஒவ்வொரு தடவையும்
மிகப் புதிதாய் பெய்கிற
மழை..

மழை என்பது
சிலர் நினைவில்
மண்வாசனை,
சிலர் நினைவில்
இடி-மின்னல்,
சிலர் நினைவில்
சிற்றுண்டியுடனான தேநீர்,
சிலர் நினைவில்
ஒழுகும் கூரை,
சிலர் நினைவில்
தேளோ புற்றீசலோ..

வெகு சிலர் நினைவில் அது
காகித ஓடம் விட்டு
கழிபேருவகை எய்திய
பால்யத்தின் கவிதை..

*



காரணம்

பெயர் தெரியாப் பட்சியிலிருந்து
உதிர்ந்த ஒற்றை இறகே,
உன்னை இங்கு
கொண்டு வந்து சேர்த்தது எது?


கண்டம் தாண்டிய
நெடும்பயணத்தின் களைப்பா?


கார்காலக் கலவியின் 
பரவசமா?


வசந்தம் பல கண்டு
எய்திய மூப்பா?


அல்லது
மலைவாசஸ்தலத்துக்கு
விடுமுறையில் வந்தவனது
துப்பாக்கியா? 

*




பட்சிகள்.. தேவதைகள்.. யட்சிகள்..

பால்யத்தின் கனவுகளில் தோன்றி
உயிர் வருடிச் சென்ற
பட்சிகளினதும், தேவதைகளினதும் முகங்கள்
இன்று முற்றாக மறந்துபோய்
மூளியாகி விட்டன..

திறந்த இமைகளிலிருந்து
பறந்த பட்சிகள்
புலன் எட்டா புனல் மிசை
புலம்பெயர்ந்ததாய்க் கேள்வி..

யந்திர யட்சிகளது பிடியில் சிக்கி
சிறகுகள் துருவேறி விட்டிருக்கும் தேவதைகளுக்கோ
இது கட்டாய ஓய்வு காலம்..

*


 
முதுசம் 

அறை சுத்தம் செய்ய நேர்ந்த
அரிதான பொழுதொன்றில்
யதேச்சையாய்க் கண்டெடுத்த
மணிப்ரவாள நூலின்
நாய்ச்செவி முளைத்த
பழுப்பேறிய ஏடுகளின் நடுவே
உறங்குகிறது
இன்னமும் குட்டி போடாத
கடந்த நூற்றாண்டின்
மயிலிறகொன்று...

*




விரகம் 

ஏகாந்த நிசி வரை
உயிர் வருடும்
உன் நினைவுகளில்
திளைத்துக் களைத்தபின்
வரும் கனவிலும் நீ
—பாழும் மாளிகையில் எஞ்சிய
மணல்கடிகாரத்தின்
குவளைகளை நிரப்பிவிடுகிற
சாசுவதமான துகள்கள் போன்று!

*



மீட்டல் 

பேருந்தின் புறப்பாட்டில்
ஸ்ருதி மாறித் தேயும்
மென்சோகம் கவிகிற
தெருப்பாடகன் கானத்தின்
செவிப்புலன் எட்டாத
அடுத்து வரும் வரிகள்
நெடிய பயணத்தின்
மீதி நாழிகை முழுதும்
அகச்செவி அலைவரிசைகளில்
ரீங்கரிப்பதென 
அகாலத்தில் மீளெழுகிற
நினைவுத்துணுக்குகள்
பிரயத்தனம் ஏதுமின்றி
மனசு நிரப்பும் மௌனமாய்..

*



நேர்முகம்
"Ignorance is bliss.."

கிடைக்காத வேலைகளின்
நேர்முகங்களின் பொழுதான
நெடுநேரக் காத்திருப்புகளில்
வெறித்த பார்வையிலேயே
பரிச்சயமாகி விடுகிற
வரவேற்பறை ஓவியத்தின்
பசும்புல் மேயும் மான்களின்
கபடமில்லா விழிகளை நோக்குகையில்
பால்யத்தின் புதிர்கள்
அவிழ்க்கப்படாமலேயே 
இருந்திருக்கலாமோ என
எண்ணத் தோன்றும்..

*




முகங்கள் 

எந்திர யுகத்தின்
ஆதர்ச பிரஜையாய்
இரவல் கனவுகளில்
முற்றிலுமாய் சுயம் தொலைத்து
முடிவிலி நோக்கி
விலகிச்செல்லும் கானலை
துரத்திக்களைத்தபின்
சடுதியாய் ஒரு புள்ளியில்
போலி முகம்
கழற்றுகிற போது தான்
உணர்கிறோம்
நமதான முகம்
எப்போதோ
வெற்றிடைவெளி ஆகிவிட்டதென்பதை..

*



வெறுமை

இருத்தலுக்கான நெருக்குதலில்
அனிச்சையாய் தாழ் நெகிழ்த்தி
திறந்து கொள்கிறது
ஞாபக யன்னல்..
புறத்தே விரிகிற
ஏக்கப் பெருவெளியை
வெறித்து வெய்துயிர்க்க
கவியும் வெறுமையில்
நிழலெனப் படரும்
பிரிவின் இருண்மை
தனக்குள் புதைத்துக் கொள்கிறது
நாளைய நிச்சயமின்மைகளை..

*




ஙே?! 

அரூபவெளியின் அச்சிலிருந்து புறப்பட்டு
முடிவிலியின் முனை நோக்கி நீளும்
சூன்யத்தின் நெடிய ரேகையைக்
கண்டதுண்டா என்றாள்.
இல்லை எனப் பகர்ந்த என்னை
எள்ளி நகையாடி
அதுதான் விடை எனச்சொல்லி
தேய்ந்து மறைந்தாள்..

*




தியரி 

விடுமுறைக் காலத்து விஜயங்களின்
உச்சபட்ச சாகசமாய்
சிக்னல் விழக் காத்திருந்து
தண்டவாளத்தில் வைத்தெடுக்கும்
ஐந்து பைசா இடறி
தடம் புரளும் ரயில் என
பயமுறுத்திச் சொன்ன
தாய்வழிப் பாட்டிக்கு
'பட்டாம்பூச்சி விளைவு'* பற்றி
தெரிந்திருந்ததோ ஒருவேளை?!

*butterfly effect

*

Nostalgia


Ode To An Imaginary Friend

In my early years,
Whilst busy at my mini junk yard
I used to play with an imaginary friend:
Namely, Isawassah..

As I didn't attend pre-school,
I had not met real ones by then..
Unlike the playful kids of my age,
I was found a lonely bird..

Perhaps I seemed playing alone,
with soliloquy babblings..
Actually I was not..
My buddy Isawassah was
always with me.

We talked..
We played..
We fought..
We laughed..
We dreamed..

As the years passed,
amidst the noisy classrooms
and loads of homework
I couldn't see him often..
And gradually
he disappeared
from my world..

I'm now in the halfway..
The rat race is still on..

Once again I'm alone..
Yet he's nowhere to be seen.
Now I wonder
if he too might've forgotten me..





THE MOMENTS 


Ever had quarrel with your sister 
to pop the air bubble wrap 
that covered the new TV remote..?



Ever hummed random songs 

in front of a pedestal fan 
to hear your voice robotic..? 

*

Ever yelled the answers 

before the contestants make their attempts, 
while watching quiz shows..? 

*

Ever drawn beards and moustaches 

(and sometimes, even crossed-eyes!) 
on the tabloid cover-photos..? 

*

Ever hidden your brother's magnets 

in your Pandora box 
(kept under the bed 
with all sorts of substances)..?

*

Ever kept peacock feathers 

(which were supposed to bear featherlets!) 
between some random pages 
of your heavy math books..? 

*

Ever waited impatiently 

for the school culturals 
to conclude 
as to break the decorative balloons..? 

*

Ever typed nonsensical phrases 

using your scientific calculator 
(where the cal-display
always shows: 'syn error')? 

*

Ever made salty omelette 

(of course, making the kitchen a mess!) 
when left home alone..? 

*

Ever checked the source 

of the overheard twitter 
composed by sparrows 
at your terrace..? 

*
........... 
........... 

*

And my friend,

have you ever wondered 
why you've grown up this fast..?

*

You know what.. 

It's not only you..!

***