எந்திரன் 2014
மா நகரப் பெருவெளி
மய்யமான கட்டடம்
ஆறாவது மாடி
அயல் நாட்டு நிறுவனம்
ஐ.டி துறை வேலை
ஐந்திலக்க சம்பளம்
•
செவி கவ்வும் ஹெட் ஃபோன்
நுனி நாவில் ஆங்கிலம்
விரல் ஒற்றும் விசைப் பலகை
விழி மேயும் கணித்திரை
பின்னிரவின் மணித்துளிகள்
டிஜிட்டலில் கரைய
ஸைபர் வெளி வழியே
தொடரும் எந்திர தவம்
•
இடைக்கிடை தெம்பேற்ற
நுரை பொங்கும் நெஸ்கஃபே
சமயங்களில்
அகால வேளை குறும் பசிக்கு
ஒற்றை அழைப்பில் கதவு தட்டும்
பீட்ஸா
(இருவருக்கானது;
இலவசம்: ஒரு கோக்!)
•
இரவுப் பணி முடிந்து
இருப்பிடம் விரைகிற
நிகழ்வுத் தொடர்கள்
கனவு நனவாய்
நழுவியொழுகும்
'தே ஜா வூ’ தருணங்கள்
இலக்கின்றி வெறிக்கும்
உலர்ந்த பார்வைகள்...
நிக்கொட்டின் கசிகிற
நீண்ட பெருமூச்சுகள்...
விளக்கு முட்டும் விட்டிலினது
சிறகசைப்பின் கணப்பொழுதினுள்
தோன்றி மறைந்து இறுகும்
ஸின்த்தட்டிக் புன்னகைகள்...
அறியா முகங்கள்...
பரிச்சயமான முதுகுகள்...
லிஃப்ட்டைப் பகிரும்
சக பயணிகள்!
•
மதியம் வரை நீடிக்கும்
ஆழ் துயில் அலைவரிசையின்
உதிரிக்கனவுகளுக்கிடையே
அடிக்கடி வந்து போகிறது
கடவுச் சொல் மறந்து
கைசேதப்படுகிறதான
துர்சொப்பனமொன்று...
•
No comments:
Post a Comment