Friday, February 14, 2014

كن فيكون

ஆகுக என்றனன்*
நானாய் நீயாய்
நாம் எனப் பொதுவாய்
ஆணாய் பெண்ணாய்
அவர்-அ்வை-அதுவாய்

தனியாய் குழுவாய்
தழைத்திடும் செறிவாய்
முடிவிலி எழுவாய்
முன்கதை அறிவாய்
*
இருந்தது இருளாய்
இல்லாப் பொருளாய்

நிகழ்ந்தது விதியாய்
நிச்சயம் புதிதாய்

வெடித்தது பெரிதாய்
விரிந்தது வெளியாய்
*
பொறியாய் எரியாய்
ஒளியாய் வளியாய்

துளியாய் துணுக்காய்
வலுவாய் துகளாய்

கருவாய் அணுவாய்
உருவாய் பொருளாய்


சிறிதாய் பெரிதாய்
சிலவாய் பலவாய்

கல்லாய் மண்ணாய்
புல்லாய் பூண்டாய்

எலும்பாய் சதையாய்
எல்லாம் ஜதையாய்
*
விண்ணகம் முதலாய்
விரல் நுனி வரையாய்

இறையவன் முறையாய்
இழைத்தனன் சுளுவாய்
*
தோற்றுவாய் அறிவாய்;
போற்றுவாய் தொழுவாய்!

(*كن فيكون )

சார்பு

சார்பு

வாழ்வெனும் நெடுவழித்தடத்தில்
தற்செயலாய் சந்திக்க நேர்ந்த
ஸ்நேகம் மிகு சகபயணிக்கு
இவ்வழிப்போக்கன் வரையும்
தன்னிலை விளக்கமிது..

உம்மீது சாந்தி நிலவுக;
இறையருளும் பொலிவும் நிறைக!
உமதன்புக்கும் பரிவுக்கும்
மிக்க நன்றி..
மேலும்,
திகட்டத் திகட்டப் பொழிகிற
உயர்வுநவிற்சி மிகுந்த புகழுரைகட்கும்
உத்தியோகப் பற்றற்ற
உடல்மொழிச் செய்திகட்கும்
இன்னும்,
சொல்லி முடித்த
சொல்ல நினைத்த
சகலவித வார்த்தைகட்கும்
எனது உளங்கனிந்த நன்றியறிதல்கள்..

நிற்க;
இத்தருணத்தில் நானுமக்கு
உணர்த்த விழையும்
யதார்த்தமொன்றுளது:

நீங்களனைவரும் விதந்துரைத்து
இல்லாத கிரீடத்துக்கு
இறகு செருக முனைந்தாலும்
அடியேன் இதற்கெல்லாம்
அருகதையற்றவன்
அன்றியும்
நானொன்றும் பிறவி மேதையோ
நடமாடும் கலைக்களஞ்சியமோ
அல்லன்..

கொஞ்சம் ரசனை
கொஞ்சம் திமிர்
கொஞ்சம் வெட்கம்
கொஞ்சம் கோபம்
மிதமாய் மென்சோகம்
சராசரிக்கும்
சற்று அதிகமாகவே
அலட்சியம் என
கலவையாய்த் திரிபவன்
சாமான்யன்..

எனது நட்பு வட்டத்திலேயே
இந்த ரகத்தில்
மூவர் தேறுவர்:
ஒருவன் பட்டறை கரும்புகையிலும்
மற்றவன் பாலை தேசத்து மணற்புழுதியிலும்
பொருளியல் பரிபாஷையின் படி
'கீழுழைப்பில்' உழல
தற்செயலாய் ஒளிவட்டத்துள் நுழைந்த இன்னொருவனான எனை மாத்திரம்
வியத்தலும் நயத்தலும் என்ன ந்யாயம்?

என் தொழின்முறை முகமூடியா?
குமிழ்பசையாய் மென்றுமிழும் ஆங்கிலமா?
(அல்லது,
சமகாலப் பிரச்னைகளனைத்தினதும்
பின்னணியாய்ச் சாடப்படுகிற
உலகப் பொருளாதாரச் சரிவா?)

உமது அளவீடுகளின் சுட்டெண்
எதனைச் சார்ந்தது?

யதார்த்தபூர்வமாகச் சிந்திக்கையில்
ஒன்று மட்டும் புலனாகிறது
சர்வநிச்சயமாய்..
என் மீதான ஈர்ப்பு உட்பட
அனைத்து கருதுகோள்களுக்குப் பின்னாலும்
எளிய தத்துவமொன்றுளது:

காலம் வெளி
சூழ்நிலை பொருண்மை
ஆழம் அகலம்
நிறை எண் திசை
அறிவு திறன்
அருமை தெரிவு
லாபம் நஷ்டம்
நான் நீ
―சகலமும் சார்புக்குட்பட்டதே!

அஜ்னபி கவிதைகள் 3

மழலை

ஒவ்வோர் இரவிலும்
ஒற்றை ஒற்றலில் விளக்கணைத்து
இடையூறு இல்லா இருளில்
உறங்கிப் பழகிய குழந்தை
தடுப்பூசி ஏற்றிய நாளின்
ஜுரம் கண்ட பகலில்
படுக்கைக்கு எட்டாத
ஒளி ஆளி நோக்கி
பிஞ்சுவிரல் நீட்டி
'இருட்டை போடு'
எனச் சிணுங்குகிறாள்
கண்களை உருட்டும் கரடிபொம்மையை
கட்டியணைத்தபடி..

*



பிரியம்

பிரியமானவர்களால்
விதந்துரைக்கப்படுகிற
பரிச்சயமில்லா அந்நியர் மீது
பறவையாய் மாறி
எச்சமிடத் தோன்றும்
இனந்தெரியாத வன்மம்
அம்மா தூக்கிக் கொஞ்சிய
அயலார் குழந்தைகளின்
மிருதுவான பாதங்களை
கமுக்கமாய்க் கிள்ளிவைத்த
பால்யத்தை நினைவூட்டுகிறது.

*



சுயம்

ஆரம்பப் பள்ளி மாணவனது
அளந்து எழுதுகிற வலது கை
எழுதி எழுதி மேற் செல்ல
அனிச்சை செயலாய் இடது கை
அட்டை கொண்டு மறைப்பதாய்
சுயநலச் சிறையின்
திரையிட்ட வாழ்வினூடே
போட்டிப் பரீட்சையென
சுமையாகிப் போயின
சுற்றமும் சூழலும்..

*

ஓரிரு வரிகளெழுதி
கைவிடப்பட்ட விடைகள்..

எட்டிப் பார்த்தெழுதிய
இரவல் கணக்குகள்..

இவை தவிர
ஊன்றியெழுதி
கிழிபட்ட தாள்களாய்
நட்பும் உறவும்..

*

எழுதிய கட்டுரையை
எழுத்தெண்ணி மீளாய்தல் போல்
பழம் நினைவுகளை மீட்டுவதில்
விரயமாகும் சில பொழுதுகள்..

*

தேர்வு நேரம் முடிந்து
தாள்கள் பறிக்கப்பட்ட பிறகான
அமர்முடுகல் தருணத்தில்தான்
உறைக்கிறது
சுட்டெண் எழுத மறந்தது...
சுயம் அங்கு தொலைந்தது...

*


தரு

பிற்பகலின் இளவெயில் மீது
பன்னீர் தெளித்துக்கொண்டிருந்தது
அந்தி மழை..

அருகாமை கட்டடத்தில் ஒதுங்கி
மற்றொரு தடவையும்
கொணர மறந்த குடையை
மானசீகமாய்க் கடிந்துகொண்டபோது
எதிர்ப்புறமாய் கேட்ட
எந்திர உறுமலை
வினாக்குறி தொக்க
விழி தொடரலானேன்..

ஊராட்சி பூங்காவில்
நெடுஞ்சாலைக்கு மிகச்சமீபமாய்
கிளைபரப்பி நின்ற,
யதேச்சையாகக்கூட அதுவரை
அவதானித்திராத,
அம் மாவைராட்சத எந்திரத்தின் தும்பிக்கை
வேரோடு பெயர்ப்பதை
ஜனத்திரள் ஊடே
வேடிக்கை பார்க்க நேர்ந்த
அக்கணத்தில் தான்
முதன்முதலாக―
மிகச்சரியாய் சொல்வதெனில்,
முதலும் கடைசியுமாக ―கண்டேன்..

நெஞ்சில் வடு தாங்கி
நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்த
விருட்சத்திலிருந்து
உதிர்ந்த காய்களைப்
பொறுக்கிக் கொண்டிருந்தான் ஒருவன்..

சற்றே தள்ளி
பூங்கா முன்றலில்
நிறுவப்பட்டிருந்த
நகரபிதாவின் சிலையின் மீது
எச்சமிட்டுப் பறந்தது
அவசரப்பட்சியொன்று..

*



யட்சி

அகால யாமத்தில்
என் அலைபேசியை
ஆட்கொள்ளும் யட்சி நீ..

நடுநிசியில்தான்
நம் நகர்வலம்..
இல்லையில்லை,
சர்வலோக சஞ்சாரம்..

குறுந்தகவுகளில் அனுப்புகிற
முறுவல் குறிகளுக்கு
தெரிந்து கொண்டே
விளக்கம் கேட்கிறாய்..

சமயோசித பதில்கள் ஒற்ற
தாமதமாகிற நொடிகளில்
உன் 'தவறிய அழைப்புக்களில்'
திக்குமுக்காடித் திணறுகிறது
என் அலைபேசி..

இப்போதெல்லாம்
நாம் பேசித்தீர்த்த
வார்த்தைகளை விட
பேச நினைத்தவைதான்
நன்கு புரிகின்றன..