Thursday, April 19, 2012

அஜ்னபி கவிதைகள்



www.மனிதம்.com


சுழலும் பல்சக்கரச் சிக்கலில்

இயங்கும் உலகம் கடிகாரம்

நிழலின் நீளம் குன்றுவதாக

சுருங்கும் மனிதம் சில நேரம்


முடிவிலியான

முட்களின் சுற்றோட்ட ஸ்ருதியாக

நிஷ்டை கலைத்திடும்

நிஷ்டூர இசையாக

குறுக்கிடல்களில் குழம்பி

தேடலில் தொலைகிறது

சகஸ்ராப்தம்…


வய்யக விரிவு வலையில்

சிக்குண்டு சிறகிழந்த

ஜந்துக்கள் நாம்…


அறிவதையும் அவஸ்தையாக்கி

அறிவியல் அழிவுகளில்

அரூபங்கள் ஆயினோம்


மழலையைத் தொலைத்தோம்

பசுமையைக் குலைத்தோம்


பழைமையை சிதைத்தோம்

ரசனையைப் புதைத்தோம்


சாதனங்களில் நுழைந்தோம் - வெறும்

சேதனங்களாய் விளைந்தோம்


பரம்பரைச் சொத்தாய்

பார்த்தீனியம் வித்தாய்

தொற்று நோய் விதைத்தோம் - பின்பு

தோற்றுவாய் கதைத்தோம்


சூழலை சுடுகாடாக்கினோம்

ஊழலை வாய்ப்பாடாக்கினோம்


விற்பனைப் பொருளாய்

விளைந்தது மனிதமும்


கற்பனையாயிற்று

கல்வியின் புனிதமும்


மின்சார விளக்குகளின்

வெளிச்சக் கவர்ச்சியில்

கலாசார வேர்களை

கருகிடச் செய்தோம்…


முதலாவது சவரத்தின் 

முகக்காயத் தழும்புகளாய் 

காலச் சுவடனைத்தும் 

காணாமல் போகச் செய்தோம் 


ஆய்வு குழாயில்

அன்பு பிறப்பிக்க முடியுமா?


புன்னகையை புதுப்பிக்க

பூச்சுக்கள் உதவுமா?


மரபணுச் சோதனையின்

மருத்துவச் சாதனைகள்

மனிதத்தை உயிர்ப்பிக்க

மாற்று வழி தந்ததுண்டா?


ஸின்த்தட்டிக் கனவுகள்

காணும் மனங்களில்

சிந்தனை செழித்து

சித்தாந்தம் ஒளிருமா?


இயற்கைக்கும் எமக்கும்

இடைவெளி வேண்டாம்


இருதயச் சலவையுடன்

இனியொரு விதி செய்வோம்


மனிதம் வளரவும்

ஈரப்பதம் அவசியம்

மனசில்..!






E=mc2

சமவெளிகள் தாண்டிய

மலைச்சரிவு நோக்கிப் புறப்பட்ட

வைக்கோல் நிறத்து வண்ணத்துப்பூச்சியின்

அலை கோட்டுப் பயணத்தில்

சகநிகழ்வாய்க் குறுக்கிட்ட

ஓடும் கடுகதி ரயிலின்

திறந்த ஜன்னல் வழி நுழைந்து

மறுபுறத்து ஜன்னல் வழி வெளியேறியதான

நுண்கணப்பொழுதில்

யுகங்களின் தொலைவு

கடந்துவிடப்பட்டிருந்தது







360


பிரச்னையென்கிற

மய்யப்புள்ளியை

தொட்டு நிற்கும்

தீர்வு ரேகைகள்

பல்வேறு கோணங்களில்…

துளியென இருக்கும்

புள்ளியிலான இடைவெளிகளை 

முழு வட்டம் மிகையாக்கும்…

ஒன்றையொன்று ஊடறுக்கும்

நேர்க்கோடுகளின் நீட்சி

விலகிச்செல்லும் புள்ளிக்கு

சமாந்தரமாய் நீளும்…

தனியொரு ரேகை

வட்டத்தை துண்டாடும்…

பிறிதொரு புள்ளி 

புறவெளி நோக்கி

முடிவிலியாய்த் தொடரும்…







ஜீவநதி
மலைமுகடு ஊறும்
தலைவகிடு கீறும்

சரிவுகளில் தூறும்
அருவிகளாய் மாறும்

மழைப்பருவம் தோறும்
மதகுகளை மீறும்

சில சமயம் சீறும்
சீக்கிரமாய் ஆறும்

நதி கதைகள் கூறும்
கவிதை பல நூறும்
...
...
நகர்ப்புறத்தில் ஆறும்
நரகலென நாறும்.








வேனில்

விழியெட்டும் தூரம் வரை

வெளிர் பச்சையில் விரியும்

வயல் வெளிகளினூடே

சிறகசைத்துப் படபடக்கிற

வேனில் பருவத்துப் பட்டாம்பூச்சி 

அரை நொடிக்கொரு முறை 

புலப்பட்டு மறைகிறதான

ஒற்றை ஓவியக் கண்காட்சியை

பிற்பகல் பொழுதின்

இளவெயில் மீது

தீட்டிச் செல்கிறது






புலரி


ஒளி வருஷங்கள் தொலைவிருந்து

ஓஸோன் வழியே ஊடுருவி

மலை நுதல் வருடும்

முகில் பொதி கலைத்து

ஸ்படிகத் துல்யமான

சிற்றோடையில் தெறித்து

இன்னும் விலகியிராத

பனித் தூவல் மீது 

சன்னமாய் ஒரு 

நிறமாலை விசிறி

பிறிதொரு தினத்தையும்

புதிதாய் துவக்கிய

எழு திசைக் கதிரின்


இளவெயில் கீற்றுகள்

பகிர்தலின் சுகத்தை

விடியலாய் பதிந்தன






நியதி


இளங்காலை வெயிலில்

கதிரொளி தொகுத்தபடி

தெருமுனையில் நின்றிருந்த

நெடிதுயர்ந்த விருட்சத்தின்  

துளிர் இலை செறிந்த

கிளை நுனி நீங்கி

காற்றுடனான உரசலில்

ஓரிரு இதழ்கள் இழந்து

அந்தரத்தில் சுழன்றவாறு

உதிரிச் சருகாய் மிதந்து

புவியீர்ப்பு மய்யம் தொட்டு

சுய நிழலை முத்தமிடுவது வரையான

சில நொடிப் பயணத்தில்

வாழ்வியல் தத்துவமனைத்தும்

இலவசமாய் சொல்லிப் போனது

நேற்றைய பூ.














காஸா!

சொர்க்க ராஜ்யத்தில் 
இன்னுமொரு தினம்...

மணற்துகள் செறிந்த 
நடை பாதையொன்றில்
பிரபஞ்ச பெருவினாவுக்கு 
உத்தேசமான ஒரு விடை தேடி
தனியனாய் நான்...

தினசரி வளரும் 
கருஞ்சிகப்புக் கானலின் நீட்சி 
மனிதம் சிலுவையேற்றப்படுவது
நிறுத்தப்படும் வரை தொடரும்...

முடிவிலியின் விளிம்பு நோக்கிய
காலத்தின் நெடுவழிப் பயணமோ
சீருடை தரித்த கூலிப்படையினரின் 
தானியங்கித்  துப்பாக்கிகளை பொருட்படுத்தாது
பதின் பருவத்துச்  சிறுவனது 
கவண் உமிழும் 
கூழாங் கற்களுக்கு 
மௌன  சாட்சியாகும்.. 






No comments:

Post a Comment