பதிவுகள்
அதிகாலைக் கனவுகள் போன்றன
நான் கொண்ட காதல்கள்...
முடிவு அறியுமுன்னமே
விடிந்து விடுகிறது
அல்லது
விழிப்புத் தட்டி விடுகிறது...
*
எனது காதல்களும்
நம் தேசத்துக் கல்வித்திட்டமும்
சற்றேறக் குறைய சமம்..
தீட்டப்படுவதும்
திருத்தப்படுவதுமாய்..
ஆனால்,
ஒவ்வொரு தடவையும்
மதிப்பிடுதலில் தோல்வி தான்!
*
ஒவ்வொரு காதலின் போதும்
உருவாக்கப் படுகிற
பெயர்ச் சுருக்க சங்கேதங்கள்
ஆவர்த்தன அட்டவணையின்
தனிமங்களை விட அதிகம்..
*
எனது பிரத்யேக காதல் மொழி
ஒலி வடிவத்துக்கு ஒத்து வராமல்
வரி வடிவத்தில் மட்டுமே
வார்த்தைகள் கோர்ப்பது...
தினக் குறிப்புகளின் ஏடுகளில்
மௌனமாய் உறைகிறது
இன்னும்
குட்டி போடாத
பால்யத்தின் மயிலிறகுகளுடன்..
*
நேற்றைய காதல்கள்
அற்ப ஆயுளில் முடிந்து போயினும்
அத்தனை சுலபமாய்
அழிவதில்லை
அவைதம் சுவடுகள்...
*
சரித்திரச் சான்றாவன
வெளிப்படுத்திய காதல்கள்
வெளிப்படுத்திய காதல்கள்
கடிதங்களாய்..
காவியமாய்..
கல்வெட்டாய்..
*
எனில்
எனில்
சொல்லாத காதல்கள்..?
சூசகமாய் பதிவாகும்
மின்னஞ்சல் முகவரியின்
கடவுச் சொல்லாகவேனும்!
ப்ரிய சகி
சகியே...
உன் மீது கொண்ட
எனதான ஸ்நேகம்
உயிர்கொல்லி காதலாய்
நிலை மாறியது எப்பொழுது?
*
சீருடையில் நிலவாக
நீ குடை பிடித்து நின்றது
சிற்பமாய் என் நெஞ்சில்
செதுக்கப் பட்ட பொழுதா?
*
கணக்கியல் புத்தகத்தின்
கடைசிப் பக்கங்களில்
அனிச்சையாய் உன் பெயர்
கிறுக்கப் பட்ட பொழுதா?
*
அர்த்த ராத்திரியில்
அறை இருளில் அவஸ்தையாய்
கவிதை எழுதவென
கண் விழித்த பொழுதா?
*
முன்நெற்றி முடிச்சையும்
முந்தானை மடிப்பையும்
முழுசாக உள்மனதில்
குறிப்பெடுத்த பொழுதா?
*
தெற்றுப்பல் தெரிய
தேன்மொழியாள் புன்னகைக்க
தெவிட்டாத தித்திப்பில் நான்
திளைத்த பொழுதா?
*
உனது வலது கன்னத்தில்
மச்சமாய் ஜ்வலிக்கும்
அந்த ஒற்றைப்புள்ளி கண்டு
எனது முற்றுப்புள்ளிகள்
முடிவிலியாய் மாறிய பொழுதா?
*
சுவாசத்தில் அக்னியும்
பார்வையில் ஈரமும்
ஒரு சேர உருவாகும்
முரண்பாட்டு விதிகள்
முளைத்த பொழுதா?
*
உனக்காக மட்டுமே
எதிர் பார்த்துக் காத்திருந்த
என் ஞாபகப் பதிவேட்டில்
நீ கோலமிட்ட பொழுதா?
*
உன் விழியீர்ப்பு மய்யம்
எனை உள்வாங்கிக் கொண்ட
அந்த கடைசி நாள் சந்திப்பின்
கற்புள்ள நிமிஷத்தின் பொழுதா?
*
விடிந்தால் தேர்வு என்ற
விறைப்பான ராத்திரியில்
அறைகுறை ஆங்கிலத்தில் - நான்
அன்புமடல் வரைந்த பொழுதா?
அன்புமடல் வரைந்த பொழுதா?
*
ஆரம்பப் புள்ளி எது
அறுதியிட முடியவில்லை
சமாந்தரக் கோடுகளோ
சந்திக்க நேர்வதில்லை...
*
கண்டேன் - நீயே
காட்சி என்றானாய்
கேட்டேன் - நீயே
இசையானாய்
ரசித்தேன் - நீயே
ருசி என்றானாய்
முகர்ந்தேன் - நீயே
(ஸ்)வாசமென்றானாய்
நினைத்தேன் - நீயே
வலியும், ஆனாய்...
********
சீருடையில் நிலவு..
சிகை முடிக்க நக்ஷத்ரம்..
மழை ஓய்ந்த வானமாய்
மனசு மட்டும்
வெறுமையாய்....
********
ஸ்தூலம் ப்ராணம்
ஸ்நேகம் ரோகம்
ஸ்பர்ஷம் விஷம்
ஸ்படிக துல்யம்
ஸ்வர்க்கம் நரகம்
ஸ்தல ப்ரத்யட்சம்
********
*
No comments:
Post a Comment