Thursday, April 26, 2012

Gaza


Gaza!

Yet another day
in the kingdom of heaven
I walk alone 
(as I have no choice)
on a sandy sidewalk
searching for 
an approximate answer
for the ultimate quest

The crimson mirage
would grow up day by day
till the virtual crucifixion of humanity
comes to an end

Let the voyage of time
last up to
the edge of infinity
witnessing
the catapults of teens
that spit out stones
at the uniformed assassins
just ignoring 
LMGs!







காஸா!

சொர்க்க ராஜ்யத்தில் 
இன்னுமொரு தினம்...

மணற்துகள் செறிந்த 
நடை பாதையொன்றில்
பிரபஞ்ச பெருவினாவுக்கு 
உத்தேசமான ஒரு விடை தேடி
தனியனாய் நான்...

தினசரி வளரும் 
கருஞ்சிகப்புக் கானலின் நீட்சி 
மனிதம் சிலுவையேற்றப்படுவது
நிறுத்தப்படும் வரை தொடரும்...

முடிவிலியின் விளிம்பு நோக்கிய
காலத்தின் நெடுவழிப் பயணமோ
சீருடை தரித்த கூலிப்படையினரின் 
தானியங்கித்  துப்பாக்கிகளை பொருட்படுத்தாது
பதின் பருவத்துச்  சிறுவனது 
கவண் உமிழும் 
கூழாங் கற்களுக்கு 
மௌன  சாட்சியாகும்.. 

Friday, April 20, 2012

The Man 11th Hour

The Man 11th Hour

Loft in a flat
but life is a fake.
Oft have pizza
Coke and flake.
Doin' the same shit
damn night shift.
Goin' up only when
bein' in the lift:
All day long
that merely packs
Same old faces,
bums and backs.
They ne'er smile
but sigh and stare,
Just like seein'
the same nightmare.
I'm gettin' older
day by day;
Here's the fortune
but an inch away!






எந்திரன்2012

மா நகரப் பெருவெளி

மய்யமான கட்டடம்

ஆறாவது மாடி

அயல் நாட்டு நிறுவனம்

ஐ.டி துறை வேலை

ஐந்திலக்க சம்பளம்

·

செவி கவ்வும் ஹெட் ஃபோன்

நுனி நாவில் ஆங்கிலம்

விரல் ஒற்றும் விசைப் பலகை

விழி மேயும் கணித்திரை

பின்னிரவின் மணித்துளிகள்

டிஜிட்டலில் கரைய

ஸைபர் வெளி வழியே

தொடரும் எந்திர தவம்

·

இடைக்கிடை தெம்பேற்ற

நுரை பொங்கும் நெஸ்கஃபே

சமயங்களில்

அகால வேளை குறும் பசிக்கு

ஒற்றை அழைப்பில் கதவு தட்டும்

பீட்ஸா

(இருவருக்கானது;

இலவசம்: ஒரு கோக்!)

·

இரவுப் பணி முடிந்து

இருப்பிடம் விரைகிற

நிகழ்வுத் தொடர்கள்

கனவு நனவாய்

நழுவியொழுகும்

'தே ஜா வூதருணங்கள்

·

இலக்கின்றி வெறிக்கும்

உலர்ந்த பார்வைகள்...

நிக்கொட்டின் கசிகிற

நீண்ட பெருமூச்சுகள்...

விளக்கு முட்டும் விட்டிலினது

சிறகசைப்பின் கணப்பொழுதினுள்

தோன்றி மறைந்து இறுகும்

ஸின்த்தட்டிக் புன்னகைகள்...

அறியா முகங்கள்...

பரிச்சயமான முதுகுகள்...

லிஃப்ட்டைப் பகிரும்

சக பயணிகள்!

·

மதியம் வரை நீடிக்கும்

ஆழ் துயில் அலைவரிசையின்

உதிரிக்கனவுகளுக்கிடையே

அடிக்கடி வந்து போகிறது

கடவுச் சொல் மறந்து

கைசேதப்படுகிறதான

துர்சொப்பனமொன்று...

Thursday, April 19, 2012

பதிவுகள்




பதிவுகள்
 

அதிகாலைக்  கனவுகள் போன்றன 
நான் கொண்ட காதல்கள்...

முடிவு அறியுமுன்னமே 
விடிந்து விடுகிறது 
அல்லது 
விழிப்புத் தட்டி விடுகிறது... 
 *

எனது காதல்களும் 
நம் தேசத்துக் கல்வித்திட்டமும் 
சற்றேறக் குறைய சமம்..

தீட்டப்படுவதும் 
திருத்தப்படுவதுமாய்..

ஆனால்,
ஒவ்வொரு தடவையும் 
மதிப்பிடுதலில் தோல்வி தான்!
*
ஒவ்வொரு காதலின் போதும் 
உருவாக்கப் படுகிற 
பெயர்ச் சுருக்க  சங்கேதங்கள்  
ஆவர்த்தன அட்டவணையின் 
தனிமங்களை விட  அதிகம்..
*
எனது பிரத்யேக காதல் மொழி 
ஒலி வடிவத்துக்கு ஒத்து வராமல் 
வரி வடிவத்தில் மட்டுமே 
வார்த்தைகள் கோர்ப்பது... 

தினக் குறிப்புகளின் ஏடுகளில் 
மௌனமாய்  உறைகிறது  
இன்னும்
குட்டி போடாத 
பால்யத்தின் மயிலிறகுகளுடன்..  
*

நேற்றைய   காதல்கள்
அற்ப ஆயுளில் முடிந்து போயினும் 
அத்தனை சுலபமாய் 
அழிவதில்லை 
அவைதம் சுவடுகள்...
 *

சரித்திரச் சான்றாவன 
வெளிப்படுத்திய காதல்கள் 

கடிதங்களாய்..
காவியமாய்..
கல்வெட்டாய்.. 
 *
எனில் 
சொல்லாத காதல்கள்..?

சூசகமாய் பதிவாகும்
மின்னஞ்சல் முகவரியின் 
கடவுச் சொல்லாகவேனும்!




ப்ரிய சகி

சகியே... 
உன் மீது கொண்ட 
எனதான ஸ்நேகம்
உயிர்கொல்லி காதலாய்
நிலை மாறியது எப்பொழுது?
*
சீருடையில் நிலவாக 
நீ குடை பிடித்து நின்றது 
சிற்பமாய் என் நெஞ்சில்
செதுக்கப் பட்ட பொழுதா?
*
கணக்கியல் புத்தகத்தின்
கடைசிப் பக்கங்களில்
அனிச்சையாய் உன் பெயர்
கிறுக்கப் பட்ட பொழுதா?
*
அர்த்த ராத்திரியில் 
அறை இருளில் அவஸ்தையாய்
கவிதை  எழுதவென
கண் விழித்த பொழுதா?
முன்நெற்றி முடிச்சையும் 
முந்தானை மடிப்பையும்
முழுசாக  உள்மனதில்
குறிப்பெடுத்த பொழுதா?
*
தெற்றுப்பல் தெரிய
தேன்மொழியாள் புன்னகைக்க 
தெவிட்டாத தித்திப்பில் நான் 
திளைத்த பொழுதா?
*
உனது வலது கன்னத்தில் 
மச்சமாய் ஜ்வலிக்கும் 
அந்த  ஒற்றைப்புள்ளி கண்டு 
எனது  முற்றுப்புள்ளிகள்
முடிவிலியாய் மாறிய பொழுதா
*
சுவாசத்தில் அக்னியும்
பார்வையில் ஈரமும்
ஒரு சேர உருவாகும்
முரண்பாட்டு விதிகள் 
முளைத்த பொழுதா
*
உனக்காக மட்டுமே 
எதிர் பார்த்துக் காத்திருந்த
என் ஞாபகப் பதிவேட்டில் 
நீ கோலமிட்ட பொழுதா?
*
உன் விழியீர்ப்பு ய்யம் 
எனை உள்வாங்கிக் கொண்ட
அந்த கடைசி நாள் சந்திப்பின்
கற்புள்ள நிமிஷத்தின் பொழுதா?
*
விடிந்தால் தேர்வு என்ற 
விறைப்பான ராத்திரியில் 
அறைகுறை ஆங்கிலத்தில் - நான்
அன்புமடல் வரைந்த பொழுதா?
*
ஆரம்பப் புள்ளி எது
அறுதியிட முடியவில்லை
சமாந்தரக் கோடுகளோ
சந்திக்க நேர்வதில்லை...
*
கண்டேன் - நீயே 
காட்சி என்றானாய் 
கேட்டேன் - நீயே 
இசையானாய்
ரசித்தேன் - நீயே
ருசி என்றானாய் 
முகர்ந்தேன் - நீயே
 (ஸ்)வாசமென்றானாய்
நினைத்தேன் - நீயே 
வலியும், ஆனாய்... 
********




சீருடையில் நிலவு..
சிகை முடிக்க நக்ஷத்ரம்..
மழை ஓய்ந்த வானமாய்
மனசு மட்டும் வெறுமையாய்....
********


ஸ்தூலம் ப்ராணம்
ஸ்நேகம்  ரோகம்
ஸ்பர்ஷம் விஷம்
ஸ்படிக துல்யம்
ஸ்வர்க்கம் நரகம்
ஸ்தல ப்ரத்யட்சம் 

********
*

அஜ்னபி கவிதைகள்



www.மனிதம்.com


சுழலும் பல்சக்கரச் சிக்கலில்

இயங்கும் உலகம் கடிகாரம்

நிழலின் நீளம் குன்றுவதாக

சுருங்கும் மனிதம் சில நேரம்


முடிவிலியான

முட்களின் சுற்றோட்ட ஸ்ருதியாக

நிஷ்டை கலைத்திடும்

நிஷ்டூர இசையாக

குறுக்கிடல்களில் குழம்பி

தேடலில் தொலைகிறது

சகஸ்ராப்தம்…


வய்யக விரிவு வலையில்

சிக்குண்டு சிறகிழந்த

ஜந்துக்கள் நாம்…


அறிவதையும் அவஸ்தையாக்கி

அறிவியல் அழிவுகளில்

அரூபங்கள் ஆயினோம்


மழலையைத் தொலைத்தோம்

பசுமையைக் குலைத்தோம்


பழைமையை சிதைத்தோம்

ரசனையைப் புதைத்தோம்


சாதனங்களில் நுழைந்தோம் - வெறும்

சேதனங்களாய் விளைந்தோம்


பரம்பரைச் சொத்தாய்

பார்த்தீனியம் வித்தாய்

தொற்று நோய் விதைத்தோம் - பின்பு

தோற்றுவாய் கதைத்தோம்


சூழலை சுடுகாடாக்கினோம்

ஊழலை வாய்ப்பாடாக்கினோம்


விற்பனைப் பொருளாய்

விளைந்தது மனிதமும்


கற்பனையாயிற்று

கல்வியின் புனிதமும்


மின்சார விளக்குகளின்

வெளிச்சக் கவர்ச்சியில்

கலாசார வேர்களை

கருகிடச் செய்தோம்…


முதலாவது சவரத்தின் 

முகக்காயத் தழும்புகளாய் 

காலச் சுவடனைத்தும் 

காணாமல் போகச் செய்தோம் 


ஆய்வு குழாயில்

அன்பு பிறப்பிக்க முடியுமா?


புன்னகையை புதுப்பிக்க

பூச்சுக்கள் உதவுமா?


மரபணுச் சோதனையின்

மருத்துவச் சாதனைகள்

மனிதத்தை உயிர்ப்பிக்க

மாற்று வழி தந்ததுண்டா?


ஸின்த்தட்டிக் கனவுகள்

காணும் மனங்களில்

சிந்தனை செழித்து

சித்தாந்தம் ஒளிருமா?


இயற்கைக்கும் எமக்கும்

இடைவெளி வேண்டாம்


இருதயச் சலவையுடன்

இனியொரு விதி செய்வோம்


மனிதம் வளரவும்

ஈரப்பதம் அவசியம்

மனசில்..!






E=mc2

சமவெளிகள் தாண்டிய

மலைச்சரிவு நோக்கிப் புறப்பட்ட

வைக்கோல் நிறத்து வண்ணத்துப்பூச்சியின்

அலை கோட்டுப் பயணத்தில்

சகநிகழ்வாய்க் குறுக்கிட்ட

ஓடும் கடுகதி ரயிலின்

திறந்த ஜன்னல் வழி நுழைந்து

மறுபுறத்து ஜன்னல் வழி வெளியேறியதான

நுண்கணப்பொழுதில்

யுகங்களின் தொலைவு

கடந்துவிடப்பட்டிருந்தது







360


பிரச்னையென்கிற

மய்யப்புள்ளியை

தொட்டு நிற்கும்

தீர்வு ரேகைகள்

பல்வேறு கோணங்களில்…

துளியென இருக்கும்

புள்ளியிலான இடைவெளிகளை 

முழு வட்டம் மிகையாக்கும்…

ஒன்றையொன்று ஊடறுக்கும்

நேர்க்கோடுகளின் நீட்சி

விலகிச்செல்லும் புள்ளிக்கு

சமாந்தரமாய் நீளும்…

தனியொரு ரேகை

வட்டத்தை துண்டாடும்…

பிறிதொரு புள்ளி 

புறவெளி நோக்கி

முடிவிலியாய்த் தொடரும்…







ஜீவநதி
மலைமுகடு ஊறும்
தலைவகிடு கீறும்

சரிவுகளில் தூறும்
அருவிகளாய் மாறும்

மழைப்பருவம் தோறும்
மதகுகளை மீறும்

சில சமயம் சீறும்
சீக்கிரமாய் ஆறும்

நதி கதைகள் கூறும்
கவிதை பல நூறும்
...
...
நகர்ப்புறத்தில் ஆறும்
நரகலென நாறும்.








வேனில்

விழியெட்டும் தூரம் வரை

வெளிர் பச்சையில் விரியும்

வயல் வெளிகளினூடே

சிறகசைத்துப் படபடக்கிற

வேனில் பருவத்துப் பட்டாம்பூச்சி 

அரை நொடிக்கொரு முறை 

புலப்பட்டு மறைகிறதான

ஒற்றை ஓவியக் கண்காட்சியை

பிற்பகல் பொழுதின்

இளவெயில் மீது

தீட்டிச் செல்கிறது






புலரி


ஒளி வருஷங்கள் தொலைவிருந்து

ஓஸோன் வழியே ஊடுருவி

மலை நுதல் வருடும்

முகில் பொதி கலைத்து

ஸ்படிகத் துல்யமான

சிற்றோடையில் தெறித்து

இன்னும் விலகியிராத

பனித் தூவல் மீது 

சன்னமாய் ஒரு 

நிறமாலை விசிறி

பிறிதொரு தினத்தையும்

புதிதாய் துவக்கிய

எழு திசைக் கதிரின்


இளவெயில் கீற்றுகள்

பகிர்தலின் சுகத்தை

விடியலாய் பதிந்தன






நியதி


இளங்காலை வெயிலில்

கதிரொளி தொகுத்தபடி

தெருமுனையில் நின்றிருந்த

நெடிதுயர்ந்த விருட்சத்தின்  

துளிர் இலை செறிந்த

கிளை நுனி நீங்கி

காற்றுடனான உரசலில்

ஓரிரு இதழ்கள் இழந்து

அந்தரத்தில் சுழன்றவாறு

உதிரிச் சருகாய் மிதந்து

புவியீர்ப்பு மய்யம் தொட்டு

சுய நிழலை முத்தமிடுவது வரையான

சில நொடிப் பயணத்தில்

வாழ்வியல் தத்துவமனைத்தும்

இலவசமாய் சொல்லிப் போனது

நேற்றைய பூ.














காஸா!

சொர்க்க ராஜ்யத்தில் 
இன்னுமொரு தினம்...

மணற்துகள் செறிந்த 
நடை பாதையொன்றில்
பிரபஞ்ச பெருவினாவுக்கு 
உத்தேசமான ஒரு விடை தேடி
தனியனாய் நான்...

தினசரி வளரும் 
கருஞ்சிகப்புக் கானலின் நீட்சி 
மனிதம் சிலுவையேற்றப்படுவது
நிறுத்தப்படும் வரை தொடரும்...

முடிவிலியின் விளிம்பு நோக்கிய
காலத்தின் நெடுவழிப் பயணமோ
சீருடை தரித்த கூலிப்படையினரின் 
தானியங்கித்  துப்பாக்கிகளை பொருட்படுத்தாது
பதின் பருவத்துச்  சிறுவனது 
கவண் உமிழும் 
கூழாங் கற்களுக்கு 
மௌன  சாட்சியாகும்..