பயணிகள் கவனிக்கவும்!
கரடு முரடான பாதையை வென்று
ஃபோர் வீல் சுழற்சியின் வீர்யத்தில்
செம்மண் புழுதி கிளப்பிய
ஸஃபாரி ஜீப்பிலிருந்து
சன்னமாய் கசியும் டீஸல் புகையில்
கார்பன் கந்தகம் இன்ன பிற சேர்வைகளுடன்
அந்தி நேரத்து அவசரமும் சூழ்ந்தது
*
ஹைஜீனிக் வாழ்க்கை முறை பழகியதில்
ஃபுட் ஸிட்டியில் வாங்கி வந்த
மினரல் வாட்டர் புட்டிகளும் (லீட்டர் ரூ.40)
வழி நெடுக வாரியிறைத்து
வகை வகையாய் தின்று தீர்த்த
கலர் கலரான சிற்றுண்டிகளின்
விநோதமான மேலுறைகளும்
வாழ்க்கைத் தரச்சுட்டெண்ணை
அழுத்தம் திருத்தமாய் சொல்லிப் போயின
*
பாதையின் இரு மருங்கிலும்
ஓங்கு தாங்காய் வளர்ந்து நின்ற
பெயர் தெரியா மரங்களின் நிழலில்
புறமுதுகு காட்டி
குடை சாயும் இளமை
மற்றும்
சீரான இடைவெளிகளில்
பாதி நிரம்பிய
பச்சை நிறத்தொட்டிகள்
*
பிரதான வாயில் அருகே நட்டிருந்த
ஆளுயர வினைல் பலகையில்
லெதர் ஷூ ஃபேக்டரியின்
விளம்பர அனுசரணையுடன்
அரச கரும மொழிகள் யாவும்
திருப்திகரமாய் செயலாற்றின:
'விலங்குகள் சரணாலயம்
(கடல் மட்டத்திருலிருந்து 120 மீட்டர்கள்)
நன்றி,
மீண்டும் வருக!'